Monday, June 22, 2009

தவற விட்ட மழை

தவற விட்ட மழை

இரவு முழுதும் பெய்த மழையை...
அதிகாலையிலேயே உணர செய்தது...
கிளர்ந்தெழுந்த மண்வாசமும்...
தழுவி சென்ற ஈர காற்றும்.

மழையோடு விடியும் பொழுதுகள்...
உலகத்தையே புதிதாக்கி விடுகிறது.
ஊரிலுள்ள அத்தனை வீடுகளுக்கும்...
வாசல் தெளித்து வைத்திருக்கிறது மழை.

அலுவல் கிளம்பும் பொழுதுகள்..
வழக்கம் போல் இல்லை.
குளியல் முடித்து வெளியேறுகையில்...
உடலுக்குள் ஊடுருவும் மெல்லிய குளிர்..
இதயம் வரை பாய்கிறது.

சாலையெங்கும் தேங்கி நிற்கும்...
மழை நீரை தாண்டி குதிக்கையில்...
பள்ளிக் காலங்களில் அம்மா கைப் பிடித்து..
மழை சாலைகளில் நடந்த ஞாபகங்கள்.

மெல்லிய சாரலோடு மீண்டும் மழை...
மேகம் விட்டு இறங்க தொடங்குகிறது.
நனைந்து கரையவே விருப்பமென்றாலும்..
தயங்கி தயங்கி விலகி செல்கிறேன்.

ஐயோ மழை என்றபடியே...
குடை கொண்டு மழை தவிர்க்கும்..
மனிதர்களில் நானும் ஒருவனாகிறேன்.

ஐ.. மழை என்றபடியே...
குடைக்குள்ளிருந்து வெளியே கை நீட்டும்...
குழந்தைகளின் கைகளுக்குள் மொத்தமாய்...
அடைக்கலமாகிறது மழை.

தொலைந்து விட்டதாய் நினைத்திருக்கும் பால்யம்...
உண்மையில் தொலைந்து கொண்டிருக்கிறது...
ஒவ்வொரு முறை மழை தவிர்த்து
நான் ஒதுங்கும் போதும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.