Tuesday, June 23, 2009

அம்மா

என்ன எழுதுவதம்மா
எதை எழுத நான்
அம்மா
என்றழைப்பதில்தான்
எத்தனை சுகமெனக்கு..
உன் புடவைத் தலைப்புக்குள்
ஒளிந்து கொண்டிருப்பேனே..
உன் மடிமீது தலைவைத்து
உறங்கிப் போவேனே..
உன் கையால் சோறுண்ண
நடுநிசியில் விழிப்பேனே..
வேலைக்கு நீ சென்றால்கூட
வாசலிலேயே படுத்திருப்பேன்
தெருமுனையில் உன்முகத்தை
காணவேண்டித் தவமிருப்பேன்..
பண்டிகையோ விடுமுறையோ
உனக்கெல்லாம் அடுப்படிதான்
உனக்கெது பிடித்தாலூம்
எனக்கு உண்ணத் தந்திடுவாய்
எனக்கொரு நோயென்றால்
ஊருக்கே தெரிந்துவிடும்
உனக்கொரு நோயென்றால்
உள்ளுக்குள் புதைத்திடுவாய்
உனக்கான துயரங்கள்
யாருக்கும் தெரிந்ததில்லை
நோயுற்ற காலத்திலும்
கடமையில் தவறியதில்லை

எனை விட்டு ஒருநாளும்
பிரிந்திருக்க மாட்டாயே
எப்படியம்மா தாங்கினாய்
பல்லாயிரம் மைல் பிரிவை..
உன்னருமை தெரியுமம்மா
பிள்ளையொன்று வந்தபின்பு
இன்னுமின்னும் புரியுதம்மா
அம்மாவாய் ஆகவேண்டி
ஈன்றால் மட்டும் போதுமா
தவம் செய்வேண்டுமம்மா
அம்மா எனும் வார்த்தைக்கு
வாழும் அர்த்தம் நீ
அம்மா.. அன்பின் உருவமே
கனிவூறும் கண்களே
உன் அறிவும் அருளும்
கருணையும் கம்பீரமும்
திடமும் தியாகமும்
சகிப்புத்தன்மையும் சாந்தமும்
பொறுப்பும் பொறுமையும்
மென்மையும் மேன்மையும்
எனக்கு வராதம்மா..
மெச்சுகிறேனம்மா…
வியக்கிறேன் உன்னைக்கண்டு..

அருமை அம்மா..
உன்னைக் கட்டிக்கொண்டு
உன்னருகில் தூங்கி
உன் முகத்தில் விழித்து
உன்னிடம் திட்டுவாங்கி
உன்னிடம் கோபித்து
உன்னுடன் விளையாடி
உன் செல்ல மகனாய்
உன்னுடனே இருக்கவேண்டும்
காத்திருக்கிறேனம்மா…
உன் மகனாய்…

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.