Friday, June 19, 2009

நெல்வயலில் களையெடுக்கும் தாய். அவளது குழந்தை வயல் ஓரமாக அமைந்த மரத்தின் கிளையில் தூளியிட்டு படுத்துக் கிடக்கிறது. சற்று நேரத்திற்கெல்லாம் பசிவந்து அக்குழந்தை பசியில் அழுகிறது! மகவுக்கு பால் கொடுக்கச் சென்றால் வரப்பில் நிற்கும் பண்ணையார் ஏசுவார். பால் கொடுக்காமல் இருந்தாலோ குழந்தை அழுது அழுது தொண்டை வறண்டு போகும். இப்படி மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் அந்த தாய் இருதலைக் கொள்ளி எறும்பாய் துன்பப்படுகிறாள்! அவள் மனதில் நினைத்திருக்கும் வரிகள் இங்கே கவிதையாக!

மரத்தில தூளி கட்டி, மவராசன தூங்க வச்சி, நல்ல வெயிலு பின்னியெடுக்க! நான் இறங்கினேன்... நெல்லு வயல்ல களையெடுக்க! கண்ணு என்னமோ நெல்லு மேல! கவனம் எல்லாமே பிள்ள மேல! செத்த நேரந்தான் ஆகிருக்கும்! பெத்த புள்ள அழுதிட்டிருக்கு! பரபரன்னு ஏறினேன்.. வயற்பரப்பு மேல... பசியால அழுது துடிக்குது பச்ச புள்ள குரலு! -அதுக்கும் மசியாம என்ன வெரட்டுது பண்ணையாரு குரலு! அழாதேடா கன்னு! ஆத்தா அடிவயிறு வலிக்குது! என்ன செய்யறதுன்னு புரியாம என் மனசு தவிக்குது! பண்ணையார எதித்து, பால்கொடுக்க நான் வந்தா, இந்த வேளைக்கு பசியாறும்... அடுத்த வேளைக்கு.... நான் எங்க போவேன்? அடுத்த வேலைக்கு நான் எங்க போவேன்? வேலய முடிச்சி வெரசா வாரேன்! என் மக ராசா! அது வரைக்கும்.. காத்தனுப்பி தூங்க வையி! என் மர ராசா!

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.