Tuesday, April 27, 2010

அப்பா!!

நான் உடுத்திய புதுத்துணி
நான் ஒட்டிய சைக்கிள்
நான் வெடித்த பட்டாசு
நான் உண்ட அறுசுவை உணவு
நான் கொண்ட தொப்பை
எதுவுமில்லை உன் உழைப்பின்
வியர்வை இல்லையெனில்...

நான் கற்ற கல்வி
நான் வாங்கிய இஞ்சினியரிங் பட்டம்
நான் கொண்டிருக்கும் பதவி
எதுவுமில்லை உன் மகனைப் பற்றிய
கனவு உனக்கு இல்லையெனில்..

நீ கஷ்டப்பட்டு உழைத்து
என்னை கஷ்டபட விடாமலேயே
வாழ வைத்தாய்

நீ உதிரம் சிந்தி உழைத்து
என்னை வியர்வை கூட சிந்தவிடாமல் செய்தாய்

நான் உயர்வதற்காக நீ
எத்தனை முறை குனிந்தாயோ ??

உன் வரம்பிற்கு மீறி உழைத்து என்னை
என் தகுதிக்கு மீறி உயர்த்தி விட்டாய்
ஐயகோ! இந்தக்கடனை
எத்தனை EMI -களில் அடைக்கப் போகிறேனோ?

நான் உறங்கியது பஞ்சு மெத்தையில் அல்ல
உன் உழைப்பின் மொத்தத்தில்


உன்னிடம் பொருட்செல்வம் இல்லாமலிருந்த பொழுதும்
உனது நம்பிக்கையை வீடு முழுவதும் உலாவ விட்டாய்,

அந்த நம்பிக்கையினால் நீ எமனுக்கே டாட்டா சொன்னவன் ஆயிற்றே !!!

நீ எமனை மரண வாசலில் சந்தித்த பொழுது
அவனுக்கு தெரிந்திருக்கிறது உன்னை பறித்துச்சென்றால்
அவனுக்கது நீங்கா பழியைத் தருமென,
அதனால் தான் அவன் வெறுங்கையுடன் திரும்பி சென்று விட்டான்..

உன் மகனைப் பற்றி கொண்ட கனவுக் கோட்டையை மெய்யாக்க
நீ கட்டிய நிஜக்கோட்டையை இழந்தாய்

உன் நிஜக்கோட்டையை திருப்பிக் கொடுத்தால்
எனது கடன் சற்று குறையுமோ??

உன் மகனைப் பற்றி பெருமையாக தம்பட்டம் அடித்துக் கொண்டாய்
கோபப்பட்டேன் , பிறகு உணர்ந்து கொண்டேன்
உன் மகனைப் பற்றி நீ பெருமை கூறாவிடில்
பிறகு வேறு யார் கூறுவது??

நல்ல தந்தையாய் உன் கடமையை முடித்து
நற்பெயர் பெற்றுக்கொண்டாய்
நல்ல தமயனாய் என் கடமையை நான் செய்ய
இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டும்.

உன் தந்தை உனக்கு எந்த வசதியும் செய்து கொடுக்கவில்லை
ஆனாலும் உன் தந்தையை உன்னால் பெருமை கொள்ள செய்தாய்
எனக்கோ நீ அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தாய்
எனவே உன் தந்தையின் பெருமையை விட அதிகமான
பெருமையை உனக்கு சமர்ப்பிக்க பயணித்துக் கொண்டிருக்கிறேன்.....

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.