Tuesday, April 27, 2010

இயற்கையும்---நானும்

இயற்கையிடம்
ஒரு
கேள்வி..............?

செயற்கையின்
சாயல் இல்லாமல்
இருப்பது
இயற்கையா?

இல்லை,
இல்லை
இயல்பாக
இருப்பது மட்டுமே
என்றது
இயற்கை.

உன்னிடம்
இன்னொரு
கேள்வி.........?
செயற்கை என்பது.........

இயல்புக்கு
புறம்பானது
அனைத்தும்
செயற்கையே!

அப்படி என்றால்
செயற்கை என்பது
இயற்கையின்
சாயல் இல்லாமல்
இருப்பது தானே!

உன்னிடம்
ஒரே ஒரு
கேள்வி......
என
இயற்கை
என்னைக்
கேட்டது?


“ம்”
என்றேன்
ஆணவத்துடன்.....

நீ
இயற்கையா?
அன்றி
செயற்கையா?

நான்
இயற்கை தானே?
இதில் என்ன
சந்தேகம்?
என்றேன்..........

அப்படி என்றால்
என்னின்
பாஷைகள்
உனக்கு ஏன்
புரியாமல்
போகிறது?

இயற்கையோடு
ஒன்றி
வாழ்ந்த
நீ
மட்டுமே
அதைவிட்டு
தொலைதூரம்
சென்றுவிட்டாய்.
கேட்டால்
ஆறாம் அறிவு
என்கிறாய்...

அந்த
அறிவின்
அடிப்படை
அகத்தின் வழி
நோக்குதல்
தானே!

ஏனோ
அதைவிட்டு விட்டு
ஆழ்கடல்
ஆராய்ச்சிவரை
சென்று
கிடைக்காமல்
அணுவைத்
துளைத்து
அதனுள்ளே
அவனியை
புகுத்த நினைக்கும்
உன்னறிவைக்
கண்டு
நான்
வியக்கிறேன்....
அதே நேரத்தில்

விளைவின்
விபரீதத்தை
உணரமுடியாத
உன் அறிவு
வேடிக்கையாகவும்
இருக்கிறது..........

ஓரறிவு
ஈரறிவு
மூன்றறிவு
உயிரிகள்
கூட
என்னின்
சீற்றத்தை
உணர்ந்து
தற்காத்துக்
கொள்கிறது.

ஆறறிவு
என்று
அகமகிழும்
நீ மட்டுமே
பகுத்தறிவு
என்று
பறைசாற்றுகிறாய்....

தொலைந்து போ!
என்று
உன்னை
தொலைக்கவும்
மனமில்லை......

படைப்பின்
பரிணாமத்தை
மட்டுமே
வைத்துக் கொண்டு
செயற்கையின்
சாயலுக்கு
சான்றாய்
திகழும்
உன்னை
நான் இல்லை
என்பேனா..........?

நீ தான்
நான்
நான் தான்
நீ.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.