Tuesday, April 27, 2010

"காதலியில்லாக் காதலன்"

என்னடா இது!
நமக்குத்தான் காதலியே இல்லையே,
அப்புறம் எப்படிப் பிறக்கிறது
இந்தக் கவிதை மாதிரியெல்லாம்?

நினைத்துக் கொண்டே
பைக்கை நெருங்கினேன்
வருவது கண்டு ஓடிய
குழந்தையின் பயம் அழகு.

வெளியே எடுத்து
உதைக்கும் போது எதிரே
பெட்டிக்கடைப் பெண்ணின்
புன்னகை அழகு.

சென்றது ஆபீஸ் நோக்கி,
போட்டியின் வாலிபர்கள்
பைக்கை முறுக்கியதும்
எழும் சத்தம் அழகு.

சப்வேயைக் கடகும்போது
முன்னால் செல்லும்
பின்னால் உள்ள துப்பட்டா
பறப்பது அழகு.

சிக்னல் இல்லா சந்திப்பு,
நாலா புறமும் வரும்
அவசரத்தில் பிறந்தவர்களின்
முட்டல் அழகு.

சிக்னலில் யூடர்ன்,
போலீஸ்காரர் பிடிப்பாரோ?
பயந்துகொண்டே திரும்பும்
புது பைக் அழகு.

அப்பாடா! சிக்னல் எல்லாம்
கடந்து விட்டேன் என்று
நிம்மதியாய் செல்லும்
அகன்ற சாலை அழகு.

ஆபீஸ் நுழையும்போது
குட்மார்னிங் அண்ணா
சிரிப்போடு சொல்லும்
தோழி அழகு.

ரெண்டும் நல்லாத்தான் இருக்கும்,
நான் செய்ததுதான் சரி
அடித்துக் கொள்ளும் நண்பர்களின்
போட்டி அழகு.

மாலை நேரம் முடிவு
வீட்டிற்கு செல்லப்போகும்
நண்பர்கள் முகத்தில்
உற்சாகம் அழகு.

வெளியே வந்தால்
பைக் சீட்டில் வரைந்த
ஆபாயில் போன்ற
காக்கா எச்சம் அழகு.

அனைவரும் விரைவாய்
வீட்டிற்குப் பறக்க
அதைவிட அவசரமாய்
மங்கும் வானம் அழகு.

செல்லும் வழியில்
கேட்காமலேயே சிகரெட்
எடுத்துவைக்கும் அண்ணாச்சி
கடையில் பரபரப்பு அழகு.

இரவு உணவு மெஸ்ஸில்
உனக்கு தோசதானப்பா?
கேட்கும் ஆயாவின்
சுறுசுறுப்பு அழகு.

தூங்கும் முன் அழைத்து
ஏண்டா போன் பண்ணல?
கேட்கும் அம்மாவின்
பாசம் அழகு.

விளக்கை அணைக்கும் முன்
பவர்கட், ஏற்றி வைத்த
மெழுகுவர்த்தி ஒளியின்
ஆட்டம் அழகு.

அனலுடன் புழுக்கம்
தூங்க முடியாவிட்டாலும்
தேவையில்லாமல் உதித்த
இந்தச் சிந்தனை அழகு.

காதலியே இல்லின்ன!
எதத்தாண்டா காதலிக்கல நீ?
கேட்கும் மனதின்
நக்கல் அழகு.

எல்லாவற்றையும் காதலிக்கிறேன்
பதிலுக்கு காதலிப்பவளைத் தவிர.
யாருமே காதலிக்காத என்
வாழ்க்கை அழகு!!!

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.