Tuesday, April 27, 2010

தாய் ...

ஏதோ ஒரு இரைச்சல் --
இனம் புரியா கலவரம் என்னுள் வெடிக்கிறது.
வேற்று கிரகத்தில் வீழ்ந்திட்டேன்
விழிநீரின்றி அழுதிட்டேன்.
அடி வயிறு குமுறல் கேட்டு
ஆனந்தப்படும் ஜீவன்கள்...
என்னுலகத்தில் கண்ட இன்பம்
எப்போது காண்பேனோ?


இருள் உலகத்தின் ஈரைந்து கால
ராஜா நான்.
விழியோ! செவியோ! வேலை கொண்ட வேளை இல்லை.


நாழிகைக்கு உட்பட்ட பொழுதில் உலக வளம்
நிகழ்த்திக்காட்டும் நிகரில்லா வீரன் நான்
நிகராக சொல்வதற்கு நிழல் கூட எனக்கில்லை.


அடியேன் மட்டும் இன்புற்றிருக்க
ஆண்டவன் ஈன்ற அற்புத உலகம்.
என்னுலகத்தில் நான் மச்சாவதாரம்
ஓய்ச்சல் இல்ல நீச்சல் .
உதடுகள் கூட உயராமல் ஊட்டச்சத்து
உடல் வந்து சேரும்.


ஆதாம் உடையில் நானிருந்தும்
அக்னியோ, வருணனோ, என்னை
அச்சப்படுத்தியதில்லை


பத்து திங்கள் பவனி வந்த என்னை
கத்தி முனையில் கிரகம் கடத்தி விட்டனர்
வெண்ணிற ஆடை இட்ட வஞ்சகர்கள்.


என்றாலும் நெஞ்சார்ந்த நன்றி
இத்தனை காலம் நான் ஆட்சி செய்த
பவனியை மேனியாய் தாங்கிய
அன்னையை காண அச்சாரமிட்டதற்கு.....


தாய் எனும் உலகிருந்து வந்த
செய் எனும் புது வாசி நான்,
ஏன் அலறல் கேட்டு
ஆனந்தபடுவோர் சுற்றம் நிற்க
என் அசைவுகள் அனைத்திலும்
ஆனந்தபடுகிறாள்
ஏன் அகிலம் சுமந்த அரசி
அம்மா......!!!!!!!

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.