Tuesday, January 26, 2010

என் அன்பு அம்மா...

உன்
கர்ப்ப நிலத்தில் விதைக்கப்பட்டு
உதிரத்தில் ஊறிப்போய்
வெறும் தேகப் பையில்...

உன்
உயிரின் ஒரு துளியை
நிரப்பிக் கொண்டு...

உன்
கனவு மூட்டையின்
ஒரு கனவாய்...

உன்
தொப்புள் கொடியை
வேராய்ப் பிடித்துக் கொண்டு...

ஜனனத்தின் கதவைத் திறந்து
ஜகத்தின் கருங் குழிக்குள்

ஒளிந்துக்கிடக்கும்
மரண விளக்குக்கு
திரித் தூண்ட
வந்த மனிதர்களுள்
நானும் ஒருவனாய்....

விம்மி அழுதுக் கொண்டே
உன்னிலிருந்து
நழுவி விழுந்ததும்
ஆறுதலாய் இருந்தது
உன் புன்னகைதான்....

உன் முகம் தான்
நான் கண்ட முதல் அதிசயம்....

மெல்லிய நீவல்களை
தந்த உன் விரல்கள்
புன்னகைச் சுரக்கும்
மந்திரக் கோல்கள்
என்று எண்ணி

இறுகப் பற்றிக்கொண்டு
மனிதனாய் வளர்ந்தும்....
உணர்வுகளை புதைத்துக் கொண்டு
ஊமையாய் நிற்கும்
மரம் போல் ஆனேன்-இன்று
ஓய்ந்து கிடக்கும்
உன்னைப் பார்க்கையில்...

உடலில் ஒட்டிக்கிடக்கும்
மிச்ச உயிரையும்
பிழிந்து துளித் துளியாய்
கசியும் உன்
கண்ணீரில் கரைந்து
கொண்டிருக்கிறேன் நான்…..

நீ சோறூட்டி விடும் போது
என் வாயிலிருந்து
தப்பிச் சென்று நாடி
குழியில் சிக்கும் அந்த
ஒரு பருக்கையும்
“எனக்கு பசியாற்றும்”-என்று

உன் வாய்க்கு கொண்டு செல்லும்
அந்த தெய்வீக விரல்களை
மெல்ல பற்றிக் கொண்டு
ஆறுதலாய் சொல்கிறேன்
“உனக்கு நூறாயுள்”என்று…

பொய்யென்றாலும் கூட
இறந்துக் கிடக்கும்
அந்த அழகியக் கைகளை
உயர்த்தி என் கன்னங்கள்
தடவி "உன்ன விட்டுட்டு
போயிடமாட்டேண்டா என்
கண்ணு"என்று நீ சொல்லும்
போது என்னை தூங்க வைத்த
மார் மீது விழுந்து
கதறி அழுவேன்....

அந்த
மரண விளக்கை
அழித்து விடென்று இறைவனுடன்
மன்றாடிக்
கொண்டிருக்கும் போதே...

உன் இதயத் துடிப்புகளை
எதிர் காலம் விழுங்க....

என் தலைக் கோதி
மறித்த உன் கைகளுக்குள்
மீண்டும் குழந்தையாகி.....

விம்மி
அழுகிறேன்....
என் அன்பு அம்மா....!!

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.